"ஜோஸ் ஆலுக்காஸ்"- ல் திருடப்பட்ட நகைகள்... உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் மீட்பு

0 3914

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், திருடப்பட்ட 15.8 கிலோ நகைகளும் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

3 நாட்களாக போலீசாரை சுற்றலில் விட்ட திருடன், சிறப்பு கவனிப்புக்குப் பிறகு நகைகளை சுடுகாட்டில் புதைத்துவைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளான்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடைக்குள் கடந்த 14ஆம் தேதி புகுந்த திருடன் ஒருவன், 15.8 கிலோ நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்களையும் அள்ளிச் சென்றான்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில், சிங்க முகமூடி அணிந்த ஒருவனின் உருவம் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குறிஞ்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்கா இராமன் என்பவனை கைது செய்தனர்.

நகைக்கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளைக் கொண்டு, பழைய குற்றவாளிகளின் பதிவேடுகளை ஆராய்ந்து டிக்காராமனை போலீசார் கைது செய்தனர் என்று கூறப்படுகிறது. அவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு டிக்கா ராமனை அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், நகைகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று அவனிடம் கேட்டுள்ளனர். இங்கே, அங்கே என 3 நாட்களாக சுமார் 7 இடங்களுக்கும் மேல் டிக்காராமன் போலீசாரை சுற்றலில் விட்டான் என்று கூறப்படுகிறது.

பிறகு போலீசாரின் “சிறப்பு கவனிப்பு”க்குப் பிறகு திருடப்பட்ட நகைகளை உருக்கி, ஒடுகத்தூர் அடுத்த உத்திர காவேரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைத்து வைத்திருக்கிறேன் என வாக்குமூலம் கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து டிக்காராமன் குறிப்பிட்ட இடத்துக்கு அவனை அழைத்துச் சென்று போலீசார் நகைகளை மீட்டுள்ளனர். டிக்காராமனோடு சேர்த்து திருட்டு சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் இருவரை கைது செய்துள்ளதாகக் கூறும் போலீசார், கடையின் பின்பக்கம் வெண்ட்டிலேட்டர் இருப்பது டிக்காராமனுக்கு எப்படி தெரிந்தது, ஊழியர்கள் எவரேனும் உதவி செய்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments